200. அருள்மிகு காளையீஸ்வரர் கோயில்
இறைவன் காளையீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
இறைவி சொர்ணவல்லி, சௌந்தர்ய நாயகி, மீனாட்சி
தீர்த்தம் யானை மடு, புஷ்பவன தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர், சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கானப்பேர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'காளையார் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், நாட்டரசன்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தலச்சிறப்பு

சுந்தரர் திருச்சுழி தலத்திற்கு வந்து வழிபட்டு தங்கியிருந்தபோது, இறைவன் காளை வடிவில் அவரது கனவில் தோன்றி, 'தாம் உறைவது கானப்பேர்' என்று கூறி மறைந்தார். அதனால் இத்தலத்திற்கு 'காளையார் கோயில்' என்னும் பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் மூன்று மூலவர்கள் உள்ளனர்.

ஒரு மூலவர் 'காளையீஸ்வரர்', 'காளீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், மிகச் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சொர்ணவல்லி', 'சொர்ணாம்பிகை' என்னும் திருநாமங்களுடன், இரண்டு திருக்கரங்களுடன் தரிசனம் தருகின்றாள். இந்த மூலவரே சம்பந்தர் மற்றும் சுந்தரரின் பதிகம் பெற்றவர்.

அடுத்த மூலவர் 'சோமேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

மற்றொரு மூலவர் 'சுந்தரேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மீனாட்சி' என்னும் திருநாமத்துடன், இரண்டு திருக்கரங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நடராஜர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இங்குள்ள மூன்று மூலவர்களைப் பற்றி, 'காளை தேட; சொக்கர் சுகிக்க; சோமர் அழிக்க' என்ற சொல் வழக்கு இப்பகுதியில் உள்ளது.

ஒரே கோயிலில் மூன்று மூலவர்கள், மூன்று அம்பாள் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது ஒன்றே. தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன் தளியில் மூன்று மூலவர்கள் உள்ளனர். ஆனால் அக்கோயிலில் அம்மன் சன்னதி கிடையாது. ஒரே அம்மன் சன்னதி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் மட்டுமே.

சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள இராஜகோபுரத்தை மருது பாண்டிய மன்னர்கள் கட்டினர். பெரிய இராஜகோபுரம் முதலாம் சுந்தர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது.

இந்திரன், ஐராவதம் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com